கர்நாடகத்தில் 250 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் - மந்திரி சுதாகர் பேச்சு

கர்நாடகத்தில் 250 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

Update: 2022-01-26 19:46 GMT
பெங்களூரு,

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பெரேசந்திரா கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:-

இது மாதிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகும். இங்கு 24 மணி நேரமும் மருத்துவ சேவைகள் கிடைக்கும். தற்போது இங்கு 6 படுக்கைகள் உள்ளன. இதை 12 படுக்கைகளாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டாக்டர்களின் எண்ணிக்கையும் ஒன்றில் இருந்து 3 ஆக உயர்த்தப்படும். நர்சுகள் உள்பட அனைத்து பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.

இங்கு பணியாற்றும் அனைவருக்கும் வீட்டு வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் 3 இடங்களில் இத்தகைய மாதிரி ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கர்நாடகத்தில் 250 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும். அடுத்த சங்கராந்தி பண்டிகைக்குள் இந்த கட்டுமான பணிகள் நிறைவடையும்.

சிக்பள்ளாப்பூரில் 700 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிக்பள்ளாப்பூர் அரசு மருத்துவ கல்லூரி தற்போது வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த பணிகள் முடிவடைந்தவுடன் அந்த கல்லூரி புதிய கட்டிடத்தில் இயங்க தொடங்கும். இங்கு ஆண்டுக்குள் 150 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

மார்பக புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் அதை முழுவதுமாக குணப்படுத்த முடியும். அதனால் பெண்கள் தாமாக முன்வந்து மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். படித்த பெண்களே இந்த பரிசோதனையை செய்துகொள்ள தயங்குகிறார்கள். யாருக்கும் இந்த தயக்கம் வேண்டாம். நல்ல உணவு பழக்கத்தை பின்பற்றி உடல் ஆரோக்கியத்தை காக்க வேண்டும்.

இவ்வாறு சுதாகர் பேசினார்.

மேலும் செய்திகள்