கர்நாடகா: பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனருக்கு கொரோனா

பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.;

Update:2022-01-27 01:29 IST
கோப்புப்படம்
பெங்களூரு, 

கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகராட்சியில் தலைமை கமிஷனராக பணியாற்றி வருபவர் கவுரவ் குப்தா. இவர், கடந்த சில நாட்களாக மாநகராட்சி சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக கவனித்து வந்தார். 

அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால், பரிசோதனை செய்து கொண்டார். இந்த நிலையில், கவுரவ் குப்தாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டாக்டர்களின் அறிவுரைப்படி அவர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி இருப்பதால், தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் முன் எச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படியும் தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.

முன்னதாக மாநகராட்சி சார்பில் நடைபெற்ற குடியரசு தினவிழாவுக்கான ஏற்பாடுகளை கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்துடன் சேர்ந்து மானேக்‌ஷா மைதானத்தில் கவுரவ் குப்தா பார்வையிட்டு இருந்தார். திறந்த ஜீப்பில் கவுரவ் குப்தாவும், கமல்பந்தும் சென்று அணிவகுப்பு ஒத்திகையையும் பார்வையிட்டு இருந்தார்கள். 

அத்துடன் உயர் போலீஸ் அதிகாரிகளுடன், அவர் ஆலோசனையும் நடத்தி இருந்தார். இதன் காரணமாக கமல்பந்த், உயர் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் இடையே ஆதங்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், குடியரசு தினத்தையொட்டி பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் கவுரவ் குப்தாவுக்கு பதிலாக நேற்று மாநகராட்சியின் நிர்வாக அதிகாரியான ராகேஷ் சிங் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சியில் உள்ள 8 மண்டலங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் என 300 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்