ஸ்ரீராமானுஜருக்கு அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர சிலையை திறந்துவைத்த பிரதமர் மோடி

சமத்துவத்திற்கான சிலை என அழைக்கப்படும் ஸ்ரீராமானுஜரின் சிலை நாட்டிலேயே 2-ஆவது பெரிய சிலை என்ற பெருமையை அடைகிறது.

Update: 2022-02-05 13:27 GMT
ஐதராபாத்,

ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர் வைணவ ஆச்சாரியர் ஸ்ரீராமானுஜர். இவர் காஞ்சிபுரத்தில் வளர்ந்தார். ஸ்ரீரங்கத்தில் பல்வேறு தொண்டுகளை செய்தார். உலக சமத்துவத்திற்காக பாடுபட்டார்.

வைணவ ஆச்சாரியர் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் அவரது சிலை தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள சின்ன ஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கரில் ரூ 1,000 கோடியில் அமைகிறது. தாமரை மலர் மீது தியானமுடன் அமர்ந்த நிலையில் ராமானுஜர் நிலை அமைக்கப்பட்டுள்ளது. 120 கிலோ தங்கம் சேர்த்து  சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

வேத மின்னணு நூலகம், ஆராய்ச்சி மையம்,  ஸ்ரீ ராமானுஜரின் பல படைப்புகளை விவரிக்கும்  கல்விக் கூடம் ஆகியவையும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. 

இந்த சிலையானது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சிலை என்ற பெருமையை பெறுகிறது. இந்த பெருமை மிகுந்த சிலையை திறந்துவைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி  இன்று  மாலை சின்ன ஜீயர் ஆசிரமத்திற்கு வந்தார். சிலை திறப்பிற்கு முன்பாக பூஜை செய்யப்பட்டது. பூஜையின் போது மோடி சிலைக்கு தீபம் காட்டினார்.

பின்னர் மாலை 6.30 மணி அளவில் பிரதமர் மோடி சமத்துவத்திற்கான சிலை என அழைக்கப்படும் ஸ்ரீராமானுஜரின் சிலையை திறந்துவைத்தார்.

மேலும் செய்திகள்