காஷ்மீர், ராஜஸ்தானில் அதிரடி சோதனை நடத்திய தேசிய விசாரணை அமைப்பினர்(என்.ஐ.ஏ)!

பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக காஷ்மீர் மற்றும் ராஜஸ்தானில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

Update: 2022-02-20 02:46 GMT
ஸ்ரீநகர், 

காஷ்மீர் மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத வன்முறைச் செயல்களில் ஈடுபட சதி செய்ததாக லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், அல் பதர் ஆகிய பயங்கரவாத அமைப்புகள், அவற்றின் துணை அமைப்புகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 28 பேரை தேசிய விசாரணை அமைப்பு (என்.ஐ.ஏ.) கைது செய்துள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக காஷ்மீர் மற்றும் ராஜஸ்தானில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். காஷ்மீரின் சோபோர், குப்வாரா, சோபியான், ரஜவுரி, பட்காம், கந்தேர்பால் மாவட்டங்களில் 8 இடங்களிலும், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்டத்திலும் இந்த சோதனை நடைபெற்றது. 

இதில், பல்வேறு முக்கியமான ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள், சிம் கார்டுகள், டிஜிட்டல் சேமிப்பு சாதனங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன என என்.ஐ.ஏ. செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்