கேரளாவில் பி.எப்.ஐ நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கு: ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்த 3 பேர் கைது

கேரளாவில் பி.எப்.ஐ நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-04-19 12:30 GMT
திருவனந்தபுரம், 

கேரள மாநிலம் பாலக்காடு அருகே எலப்பள்ளி பாறையை சேர்ந்தவர் அபுபக்கர். இவரது மகன் சுபைர் (வயது 43). பாப்புலர் பிராண்ட் ஆப்  இந்தியா  அமைப்பை சேர்ந்த இவர், அவரது தந்தை கண்முன்னே கடந்த  ஞாயிற்றுக்கிழமை  சில நபர்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கேரள மாநில அரசியலில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. 

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். 
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் கொலையாளிகள் வந்த கார் அடையாளம் தெரிந்தது. அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். பாலக்காடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், சுபைர் கொல்லப்பட்டது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதனிடையே, பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கொல்லப்பட்ட மறுநாளே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு  பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அரசியல் பிரிவான எஸ்.டி.பி.ஐ - கட்சியே காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. 

மேலும் செய்திகள்