விடுமுறை வேண்டுமெனில் இறந்தவர் உடலுடன் செல்பி எடுத்து அனுப்பவும்; மேலதிகாரியின் உத்தரவால் அதிர்ந்துபோன ஓட்டுனர்!

தெலுங்கானா மாநில போக்குவரத்துக் கழக பணியாளர்கள் அவசர விடுமுறை எடுத்தால், அதற்கான ஆதாரத்தை கொடுக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

Update: 2022-05-02 11:15 GMT
ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில்  சாலை போக்குவரத்துக் கழக (டி.எஸ்.ஆர்.டி.சி) பணியாளர்கள் விடுமுறை எடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், சில டிப்போக்களில் அவசர விடுமுறை எடுத்தால், அதற்கான ஆதாரத்தை கொடுக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். 

இதுபோன்ற விசித்திர சம்பவத்தில், ஓட்டுனர் ஒருவர் தனக்கு நெருக்கமானவரின் உயிரிழந்ததை அடுத்து, இறுதிச் சடங்கில் பங்கேற்க சென்று இருக்கிறார். இதே காரணத்தை கூறியதற்கு, இறந்தவர் சடலத்துடன் செல்பி எடுத்து அனுப்பக் கோரி போக்குவரத்து அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். 

"இறந்தவர் சடலத்துடன் எப்படி செல்பி எடுத்துக் கொள்வது? இது மிகவும் வருத்தமளிக்கும் செயல். துளியும் இரக்கமற்ற உயர் அதிகாரிகளின் மனித நேயமிக்க உத்தரவு இது" என பாதிக்கப்பட்ட ஓட்டுனர் தெரிவித்தார். 

நிர்வாகம் தரப்பில், தரத்தை அதிகப்படுத்த வற்புறுத்தப்படுவதால், பஸ் டிப்போக்களில் விடுமுறை இல்லை என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பு ஆணைகளை பெறும் ஓட்டுனர்கள் மற்றும் கண்டக்டர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு முறை விடுமுறை எடுக்கும் போதும் அதிகாரிகள் அவர்களுக்கு சார்ஜ் ஷீட் கொடுக்கின்றனர். 

"தொடர்ச்சியாக 100 நாட்களுக்கு விடுப்பு எடுக்காமல் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.1500 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆனால் தற்போது ஊழியர்களை கட்டாயப்படுத்தி விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வைக்கின்றனர்"  என ஆர்.டி.சி. ஜெ.ஏ.சி. ஒருங்கிணைப்பாளர் வி.எஸ். ராவ் தெரிவித்தார்.

முன்னதாக ஹெச்.சி.யு. டிப்போவை சேர்ந்த ஏ ஸ்ரீனிவாஸ் என்ற ஓட்டுனர் விடுப்பு எடுத்ததால், அதிகாரிகள் அவருக்கு சார்ஜ் மெமோ கொடுத்தனர். இதனால் மனமுடைந்த ஸ்ரீனிவாஸ் தற்கொலை செய்து கொண்டார். இனியும் தன்னால் இந்த கொடுமைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என நினைத்து, தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என ஹெச்.சி.யு. டிப்போ டிரைவர்கள் 
தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆர்.டி.சி. ஓட்டுனர்களின் நலன் பற்றிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. 

"இது போன்ற சூழ்நிலையை எனது இருபது ஆண்டு கால சர்வீசில் நான் பார்த்ததே இல்லை. இங்கிருந்து வேறு டிப்போக்களுக்கு பணிமாற்றம் பெற்றுக் கொண்டு சென்றவர்களுக்கும் இதே நிலை தான் நீடிக்கிறது. இதே நிலை தொடரும் பட்சத்தில், நாங்களும் ஸ்ரீனிவாஸ் எடுத்த நடவடிக்கையை தான் எடுக்க நேரிடும்" என மற்றொரு ஓட்டுனர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்