கடும் வெப்பம், அனல் காற்று: அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்ததுடன் அனல் காற்றும் வீசி வருகிறது.

Update: 2022-05-05 15:59 GMT
Image Courtesy: PTI
புதுடெல்லி,

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, வடமாநிலங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. கடும் வெப்பம் காரணமாக அனல் காற்று வீசி வருகிறது.

ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மராட்டியம், டெல்லி, மத்தியபிரதேசம் என பல்வேறு வடமாநிலங்களை வெப்பம் வாட்டி வதைக்கிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. 

பல மாநிலங்களில் வெப்பம் 45 டிகிரி செல்சியசை தாண்டி பதிவாகியுள்ளது. வெப்பம் அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்று வீசும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் நாட்டில் நிலவி வரும் வெப்பம்,அனல்காற்றை எதிர்கொள்ளுதல் மற்றும் வரவிருக்கும் பருவ மழைக்காலத்தை எதிர்கொள்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வெப்பக்காற்று மற்றும் பருவமழை சூழ்நிலையை மத்திய, மாநில அரசுகள் இணைந்து கையாளுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமரின் தலைமை செயலாளர், பிரதமரின் ஆலோசகர், அமைச்சரவை செயலாளர், தேசிய பேரிடர் மேலாண்மை, இந்திய வானிலை ஆயு மையம், தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.  

மேலும் செய்திகள்