குஜராத் தீ விபத்தில் 24 பேர் பலி.. பிரதமர் மோடி இரங்கல்

தீ விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு மாநில முதல் மந்திரி பூபேந்திர பாய் படேல் நிவாரணம் அறிவித்துள்ளார்.

Update: 2024-05-25 17:07 GMT

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் சிறுவர்கள் விரும்பி விளையாடுவதற்கு ஏற்ப விளையாட்டு திடல் ஒன்று செயல்பட்டு வருகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு சிறுவர், சிறுமிகள் இந்த உள்ளரங்கத்தில் அமைக்கப்பட்ட விளையாட்டு திடலில் பொழுதுபோக்குவதற்காக வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று மாலை திடீரென இந்த திடலில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், சிறுவர்கள் பலர் சிக்கி கொண்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்றனர். அவர்கள், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், தீ விபத்தில் சிக்கி பலர் சிறுவர், சிறுமிகள் உட்பட மொத்தம் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த தீ விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது; " ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்து நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. என் எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மாநில நிர்வாகம் செயல்பட்டு வருகிறது." என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தீ விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல் மந்திரி பூபேந்திர பாய் படேல் நிவாரணம் அறிவித்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்