ரெயிலில் 3 பயணிகள் எரித்துக்கொலை: கைதான ஷாரூக் ஷபி மீது பயங்கரவாத தடுப்பு சட்டம் பாய்ந்தது

கேரளாவில் ரெயிலில் 3 பயணிகள் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஷாரூக் ஷபி மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-17 22:29 GMT

கோப்புப்படம்

கோழிக்கோடு,

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் நோக்கி கடந்த 2-ந்தேதி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. இந்த ரெயிலில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 3 பயணிகள் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்யப்பட்டனர். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக கேரள மாநிலம் கோழிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து டெல்லி ஷாகின் பாக் பகுதியை சேர்ந்த ஷாரூக் ஷபி (வயது 24) என்பவரை கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை கேரள சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் எஸ்.ஐ.டி. விசாரணை நடத்தி வருகிறது.

பயங்கரவாத தடுப்பு சட்டம்

ஷாரூக் ஷபி திட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது கேரள சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசின் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கேரள கூடுதல் டி.ஜி.பி. அஜித்குமார், ஷாரூக் ஷபி மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் (யு.ஏ.பி.ஏ.) வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். மேலும் இதற்கான ஆணை கோழிக்கோடு 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டது.

யு.ஏ.பி.ஏ. சட்டத்தில் ஷாரூக் ஷபி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதால், இந்த வழக்கை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) இனி விசாரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 4 பேரிடம் விசாரணை

இதற்கிடையில் ஷாரூக் ஷபியின் செல்போன் எண்ணை கைப்பற்றி, அவர் யார்-யாருடன் தொடர்பில் இருந்தார்? என்று விசாரித்தனர். இதில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின்பேரில் கேரள மாநிலம் சொரனூரில் 4 பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்