சீன எல்லையை கண்காணிக்க 1,000 ஹெலிகாப்டர்கள், 80 விமானங்கள்; இந்திய ராணுவம் கொள்முதல் பணியை தொடங்கியது

சீன எல்லையில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள ஆயிரம் ஹெலிகாப்டர்களையும், ரிமோட் மூலம் இயங்கும் 80 குட்டி விமானங்களையும் இந்திய ராணுவம் கொள்முதல் செய்கிறது.

Update: 2022-10-21 20:57 GMT

எல்லையில் கண்காணிப்பு

இந்தியா-சீனா எல்லை கோடு அருகே உள்ள கிழக்கு லடாக்கில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இருநாட்டு படைகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பலசுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பல இடங்களில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் படைகள் முகாமிட்டுள்ளன.

அதனால் பதற்றம் நீடிக்கும் நிலையில், சீன எல்லை பகுதியை கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதை கருத்தில்கொண்டு, 1,000 கண்காணிப்பு ஹெலிகாப்டர்களையும், ரிமோட் மூலம் இயக்கப்படும் 80 குட்டி விமானங்களையும் வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணியை தொடங்கி உள்ளது.

துல்லியமாக கண்டறியும்

குட்டி விமானத்தில் 'சென்சார்' கருவிகள் உள்ளன. அவை எதிரியின் இருப்பிடத்தை கண்டறிதல், இலக்கை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பணிகளை துல்லியமாக கண்டறியும். பகல், இரவு இருவேளைகளிலும், உயரமான பகுதிகளிலும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும்.

இந்த குட்டி விமானங்களை வினியோகம் செய்ய டெண்டர் சமர்ப்பிப்பதற்கு நவம்பர் 16-ந்தேதி கடைசிநாள் ஆகும். டெண்டரில் தேர்வு செய்யப்படும் நிறுவனம், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 12 மாதங்களுக்குள் குட்டி விமானங்களை வினியோகிக்க வேண்டி இருக்கும்.

ஹெலிகாப்டர்கள்

ஆயிரம் உளவு ஹெலிகாப்டர்கள், அவசரகால கொள்முதல் நடைமுறையின் கீழ் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த ஹெலிகாப்டர்களும் 'சென்சார்' கருவிகளுடன் எதிரிகளை துல்லியமாக அடையாளம் காணக்கூடியவை. பகலிலும், இரவிலும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும்.

இதற்கான டெண்டருக்கு விண்ணப்பிக்க நவம்பர் 17-ந் தேதி கடைசிநாள் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்