கள்ளத்தொடர்பை கணவர் கைவிடாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கள்ளத்தொடர்பை கணவர் கைவிடாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-26 18:45 GMT

சிக்கமகளூரு-

கள்ளத்தொடர்பை கணவர் கைவிடாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கூலித்தொழிலாளி

தாவணகெரே மாவட்டம் மேகனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சப்பா. இவரது மகன் நாகராஜன் (வயது33). இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த பசவராஜப்பாவின் மகள் ஆஷா (30) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில், நாகராஜன், ஆஷா ஆகியோர் ஆரம்பத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். பின்னர் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கணவர் வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக ஆஷாவிற்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து நாகராஜிடம் ஆஷா கேட்டார். இதனால் அவர்கள் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில், நாகராஜன் அப்பகுதியில் உள்ள பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது ஆஷாவிற்கு தெரியவந்தது. இதையடுத்து அவர், கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கணவரிடம் கூறியுள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் ஆஷாவை நாகராஜன் தாக்கி உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினமும் இது சம்பந்தமாக 2 பேர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆஷாவை, நாகராஜன் சரமாரியாக தாக்கி உள்ளார். மேலும் ஆஷாவை மாமனார் மஞ்சப்பா, அவரது மனைவி நீங்கப்பா ஆகியோரும் தாக்கி உள்ளனர். இந்தநிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாவணகெரே புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஆஷா தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.

3 பேர் மீது வழக்கு

அதில், கணவர் நாகராஜன் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோரின் கொடுமை தாங்க முடியாமல் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார், நாகராஜன், மஞ்சப்பா, நீங்கப்பா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்