பீகார் மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்

பீகார் மாநில அமைச்சரவை விரிவாக்கம் இன்று காலை நடைபெறுகிறது.

Update: 2022-08-16 03:22 GMT

பாட்னா,

பீகாரில் 2020 சட்டசபை தேர்தலில் பாஜக-ஜேடியூ கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. அத்தேர்தலில் பாஜக 77 இடங்களிலும் ஜேடியூ 45 இடங்களில் வென்றன. எனினும், தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தப்படி ஜேடியூ தலைவர் நிதிஷ்குமார் முதல் மந்திரியாக பதவியேற்றார்.

நிதிஷ்குமார் அமைச்சரவையில் 16 பாஜக அமைச்சர்கள் இடம்பெற்றனர். பாஜகவுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் நிலவிய நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்தார்.

பாஜகவை விட்டு விலகி வந்த ஜேடியூவுக்கு ஆர்ஜேடி,காங்கிரஸ்,இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு அளித்துள்ளது. இதனையடுத்து, பீகார் மாநில முதல்-மந்திரியாக 8-வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். பீகார் மாநில துணை முதல் மந்திரியாக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், பீகார் மாநில அமைச்சரவை விரிவாக்கம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி உறுப்பினர்கள் பெருமளவு நிதிஷ் அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு கவர்னர் பதவிபிரமாணம் செய்து வைக்கிறார்.

சட்டசபையில் அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்களை கொண்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் 16 பேரும், ஜேடியூ சார்பில் 11 பேரும் அமைச்சர்களாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள், ஒரு சுயேச்சை எம்எல்ஏ உள்பட 31 எம்.எல்.ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்