மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்தி ரூ.400 கோடி நன்கொடை திரட்டிய பா.ஜனதா: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

பா.ஜனதாவுக்கு ஜனநாயக தாய் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-14 23:56 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சட்டவிரோதமான தேர்தல் பத்திரங்களை பயன்படுத்தி, தனது கொள்ளை கஜானாவை பா.ஜனதா நிரப்பி வருகிறது.

சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் சோதனையை எதிர்கொண்ட 30 நிறுவனங்கள் பா.ஜனதாவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.335 கோடி நன்கொடை கொடுத்தது ஏற்கனவே தெரிய வந்தது.

இந்நிலையில், மேலும் 15 நிறுவனங்களில் மத்திய விசாரணை அமைப்புகளை சோதனைக்கு அனுப்பி, பா.ஜனதா நன்கொடை பெற்றிருப்பது ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. இவற்றில் 4 போலி நிறுவனங்களும் அடங்கும்.

45 நிறுவனங்களிலும் சேர்த்து பா.ஜனதாவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.400 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.

சர்வாதிகார மோடி அரசு, காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகளை முடக்கி வைத்துள்ளது. ஆனால், மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி, பணம் பறித்துள்ளது. இது, அதிக நன்கொடை பெறுவதற்கான பிளாக்மெயிலா? பணம் பறிப்பா? கொள்ளையா?.

பா.ஜனதாவுக்கு ஜனநாயக தாய் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், தனது சொந்த நிதி குறித்து சுதந்திரமான ஆய்வு நடத்தி, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்