லாபத்தை அதிகரிக்க ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய பைஜூஸ் நிறுவனம் முடிவு

பைஜூஸ் தனது வருவாயை பெருக்க ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.

Update: 2022-10-13 18:09 GMT

Image Courtesy: Linkedin Divya Gokulnath/ twitter 

பெங்களூரு,

உலகின் முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய நிறுவனங்கள் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது.

குறிப்பாக முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தனது 12 ஆயிரம் ஊழியர்களை சத்தமில்லாமல் பணி நீக்கம் செய்யவுள்ளதாக அதிர்ச்சி தகவல் கடந்த வாரம் வெளியானது.

இந்நிலையில், நாட்டின் முன்னணி இணையவழி கல்வி நிறுவனமான பைஜூஸ் தனது வருவாயை பெருக்க 2 ஆயிரத்து 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத் கூறுகையில், "2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வருவாய் அதிகரிப்பை மேற்கொண்டு லாபம் மிக்க நிறுவனமாக பைஜூஸ்-ஐ உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஆறு மாதத்திற்குள் 5 சதவீத ஊழியர்கள் அதாவது சுமார் 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

மேலும், புதிதாக 10,000 ஆசிரியர்களை எடுத்து நிறுவனத்தை சர்வதேச அளவில் தரம் உயர்த்த திட்டமிட்டுள்ளோம்" என்றார். கடந்தாண்டில் சுமார் ரூ.4,588 கோடி நஷ்டத்தை கண்டதாக கூறிய பைஜூஸ் நிறுவனம், 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிதியாண்டின் முடிவில் ரூ.10,000 கோடி வருவாய் என்று தெரிவித்தது. அதேவேளை, இந்த காலகட்டத்தில் லாபம், நஷ்டம் குறித்து எந்த புள்ளி விவரத்தையும் பைஜூஸ் இதுவரை தெரிவிக்கவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்