சுப்பிரமணியசாமிக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கக்கோரி வழக்கு - டெல்லி ஐகோர்ட்டில் 31-ந்தேதி விசாரணை

சுப்பிரமணியசாமியின் மனு அக்டோபர் 31-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2022-10-28 00:16 GMT

புதுடெல்லி,

பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த சுப்பிரமணியசாமியின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இதற்கிடையே டெல்லியில் தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை மீண்டும் ஒதுக்கி தர கோரி சுப்பிரமணியசுவாமி தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 14-ந் தேதி விசாரித்தது.

அப்போது சுப்பிரமணியசாமி சார்பில் ஆஜரான வக்கீல் ஜெயந்த்மேத்தா, 'மனுதாரருக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பை கருத்தில் கொண்டு மீண்டும் அதே பங்களாவை ஒதுக்கி தர உத்தரவிட வேண்டும்' என வாதிட்டார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் ஆட்சேபம் தெரிவித்து வாதிடுகையில், 'சுப்பிரமணியசாமிக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு தொடரும். ஆனால், அதே அரசு பங்களாவை ஒதுக்கி தர முடியாது' என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி யஷ்வந்த் வர்மா, 'இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் முக்கிய பிரமுகர்களுக்கு அரசு பங்களா ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவு எதுவும் இல்லை. எனவே, மனுதாரர் சுப்பிரமணியசாமிக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை 6 வாரங்களுக்குள் எஸ்டேட் அலுவலரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இதற்கிடையே சுப்பிரமணியசாமி சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் ஜெயந்த் மேத்தா, தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு முன் ஆஜராகி, 'மனுதாரருக்கு தொடர்ந்து இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால் இதுவரை மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கவில்லை' என முறையிட்டார்.

இந்த முறையீட்டை பரிசீலித்த ஐகோர்ட்டு, சுப்பிரமணியசாமியின் மனு அக்டோபர் 31-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்