மது விருந்துடன் ஆபாச நடனமாடிய கல்லூரி மாணவர்கள்; பஜ்ரங்தள தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர்

மங்களூருவில் மதுபான விடுதியில் மதுபானம் மற்றும் ஆபாச நடனத்துடன் கல்லூரி மாணவர்கள் விருந்து நிகழ்ச்சி நடத்தினர். அந்த நிகழ்ச்சியை பஜ்ரங்தள தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர்.

Update: 2022-07-26 14:44 GMT

மங்களூரு;

கல்லூரி மாணவர்கள்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பல்மட்டா சாலையில் 'தி லவுஞ்ச் பப்' என்ற பெயரில் ஒரு தனியார் மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. அந்த மதுபான விடுதிக்கு நேற்று முன்தினம் இரவு ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் வந்தனர்.

அவர்கள் அனைவரும் மங்களூருவில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படித்து வரும் மாணவ-மாணவிகள் ஆவர்.

அவர்கள் மதுபான விடுதியில், மது மற்றும் ஆபாச நடனத்துடன் சக மாணவர்களுக்கு பிரியாவிடை கொடுத்து விருந்து நிகழ்ச்சி நடத்தினர். அவர்களது நடவடிக்கைகள் அனைத்தும் மற்றவர்கள் முகம் சுழிக்கும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.

விருந்து நிகழ்ச்சி

இதுபற்றி அறிந்த பஜ்ரங்தள தொண்டர்கள் உடனடியாக அந்த மதுபான விடுதிக்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்த மாணவர்களை மிரட்டி விருந்து நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். மேலும் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று தகராறில் ஈடுபட்டனர். இதுபற்றி அந்த மதுபான விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த மங்களூரு டவுன் போலீசார் உடனடியாக அந்த மதுபான விடுதிக்கு வந்தனர். அவர்கள் அங்கு குவிந்திருந்த மாணவர்கள் மற்றும் பஜ்ரங்தள தொண்டர்களை அப்புறப்படுத்தினர்.

முத்தப்போட்டி விவகாரம்

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து அறிந்த மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் நேற்று காலையில் அந்த மதுபான விடுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

அப்போது மதுபான விடுதியில் ஆபாச நடனத்துடன் விருந்து நிகழ்ச்சி நடத்தியது, கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்தப்போட்டி நடத்திய விவகாரத்தில் சிக்கிய அதே கல்லூரியைச் சேர்ந்த மற்றொரு பிரிவு மாணவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து மதுபான விடுதி உரிமையாளரிடம் போலீஸ் கமிஷனர் சசிகுமார் விசாரணை நடத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரபரப்பு


இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களும் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்