மோடி ஆட்சியில் வாராக்கடன் 365 சதவீதம் உயர்வு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மோடி ஆட்சியில் வாராக்கடன் 365 சதவீதம் உயர்ந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

Update: 2022-11-22 20:55 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை வாராக்கடன்கள் ரூ.5 லட்சம் கோடியாக இருந்தன. மோடி ஆட்சிக்காலத்தில், 2014-ம் ஆண்டில் இருந்து 2020-ம் ஆண்டுக்குள் இது ரூ.18 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டது.

அதாவது, 5 ஆண்டுகளில் 365 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன் கணக்கு புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவற்றில் ரூ.13 ஆயிரம் கோடி மட்டுமே திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது.

ரூ.10 லட்சம் கோடி வாராக்கடனில், 61 சதவீத நிதி பற்றாக்குறையை சரிசெய்து விடலாம். ஒருசில தொழிலதிபர்களுக்கு மட்டுமே இந்த ஆட்சியில் பலன் கிைடக்கிறது.

வங்கிக்கடன் பெற்று வேண்டுமென்றே திரும்ப செலுத்தாத 38 பேர், நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

சொத்துகளை அடிமாட்டு விலைக்கு விற்க பொதுத்துறை வங்கிகளுக்கு கட்டுக்கடங்காத அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பா.ஜனதா, தனது சாதனைகளை சொல்லியோ, பிரச்சினைகளை முன்வைத்தோ தேர்தலை சந்திப்பது இல்லை. பிரதமர் மோடியின் முகத்தை வைத்தே போட்டியிடுகிறது என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்