ஆக்கிரமிப்புகளை மீட்க சென்ற வனத்துறையினருடன் விவசாயிகள் வாக்குவாதம்

சீனிவாசப்பூர் தாலுகாவில் ஆக்கிரமிப்புகளை மீட்க சென்ற வனத்துறையினருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் 5 பொக்லைன் எந்திரங்கள் மீது கல்வீசி தாக்கினர்.

Update: 2023-09-09 18:45 GMT

சீனிவாசப்பூர்

ஆக்கிரமிப்பு நிலங்கள்

கோலார் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தனியார் ஆக்கிரமித்து இருப்பதாகவும், விவசாயிகள் சிலர் அவற்றில் விவசாயம் செய்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்த புகாரின்பேரில் வனத்துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் அளவில் வனத்துறைக்கு சொந்தமான நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

அதையடுத்து கடந்த 15 நாட்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி இதுவரை வனத்துறைக்கு சொந்தமான 600 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாக்குவாதம்

ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்கு விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று சீனிவாசப்பூர் தாலுகா நாரமாக்கனஹள்ளி கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வனத்துறையினர் சென்றனர்.

அவர்கள் 5 பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு சென்றனர். இதுபற்றி அறிந்த விவசாயிகள் அங்கு திரண்டனர்.

அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பயிர்களை அழிக்க எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையும் மீறி போலீசாரின் உதவியுடன் வனத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், வனத்துறையினர் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

மேலும் 5 பொக்லைன் எந்திரங்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 5 பொக்லைன் எந்திரங்களின் கண்ணாடிகளும் சேதமடைந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பொக்லைன் எந்திர டிரைவர்கள் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். இதன்காரணமாக அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.

இதுபற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்த வனத்துறை அதிகாரி ஒருவர், 'உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம் என்று கூறினார்.

ஆனால் இதுபற்றி விவசாயி ஒருவர் கூறுகையில், 'எங்கள் பயிர்களை சேதப்படுத்தினால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்' என்றார். இதன்காரணமாக அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்