அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.17 லட்சம் மோசடி

பெங்களூருவில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-02-17 18:45 GMT

மாரத்தஹள்ளி:

பெங்களூரு மாரத்தஹள்ளியை சேர்ந்தவர் நந்தேஷ் (வயது 33). இவர் அரசு வேலைகளுக்கு முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு உத்தரகன்னடாவை சேர்ந்த யோகேந்திரா என்பவர் அறிமுகம் ஆனார். அவர் தன்னை கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி என அறிமுகம் செய்துகொண்டார். மேலும், தனது மனைவி மற்றும் உறவினர்கள் சிலர் அரசு வேலைகளில் உள்ளதாகவும், ஒருசிலர் பெங்களூரு விதான சவுதாவில் வேலை பார்ப்பதாகவும் கூறி உள்ளார். விதான சவுதாவில் இளநிலை உதவியாளர் பதவி இடங்கள் காலியாக இருப்பதாக அவர் கூறினார்.

மேலும் நந்தேசுக்கு அந்த வேலையை வாங்கி தருவதாக உறுதி அளித்த, அவர் நந்தேசிடம் இருந்து ரூ.17 லட்சத்தை பல்வேறு தவணைகளாக பெற்றார். இதையடுத்து அவர் மாயமானார். அவரை செல்போன் மூலம் நந்தேஷ் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் வேலை வாங்கி தருவதாக கூறி யோகேந்திரா பணமோசடி செய்தது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் அச்சுகட்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்