திரவ நைட்ரஜன் பீடா சாப்பிட்ட சிறுமியின் வயிற்றில் துளை... அதிர்ச்சி சம்பவம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திரவ நைட்ரஜன் பீடா சாப்பிட்ட 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-22 09:18 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது அங்கு வந்த உறவினர்களுக்கு, நிகழ்ச்சியில் திரவ நைட்ரஜன் கொண்ட பான் பீடா வழங்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி ருசித்துள்ளனர். அப்போது இதன் ஆபத்தை உணராத 12 வயது அனன்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தனக்கும் இந்த திரவ நைட்ரஜன் கலந்த பான் பீடா வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார். இதனால் பெற்றோர் அவருக்கு அந்த பான் பீடாவை வாங்கி கொடுத்தனர்.

இதை அருந்திய சில நாட்களிலேயே அந்த சிறுமிக்கு வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் வயிற்றில் துளை உருவாகியுள்ளதை கண்டறிந்துள்ளனர்.

வயிற்றில் உள்ள துளை விரிவடைவதை தடுக்க சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுமியின் வயிற்றின் ஒரு பகுதி, சுமார் 4×5 செ.மீ அளவு அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் சிறுமி உடல் தேறி வருவதாகவும், 6 நாட்களுக்கு பின் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சமீபத்தில் திரவ நைட்ரஜன் உணவு அருந்திய சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் திரவ நைட்ரஜன் கொண்டு உருவாக்கப்படும் உணவு வகைகளை விற்பனை செய்யவும், நிகழ்ச்சிகளின் போது வழங்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்