'கூகுள் மேப்' காட்டிய வழி: கால்வாய்க்குள் காரை விட்ட சுற்றுலா குழுவினர்

கேரளாவுக்கு சுற்றுலா வந்தபோது கூகுள் மேப் வழிகாட்டுதலால் கார் கால்வாயில் பாய்ந்தது. இதில் ஐதராபாத்தை சேர்ந்த பெண் உள்பட 4 அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2024-05-25 22:52 GMT

திருவனந்தபுரம்,

இன்றைய விஞ்ஞான உலகில் சுற்றுலா செல்பவர்கள் பலரும் மனித வழிகாட்டிகளை நம்புவதை விட கூகுள் மேப்பை பயன்படுத்தியே பல இடங்களுக்கு செல்கிறார்கள். இது பல நேரங்களில் சரியாக இருந்தாலும் சில நேரங்களில் ஆபத்தில் கொண்டு விட்டு விடுகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் கூகுள்மேப் வழிகாட்டி மூலம் சென்ற வாகனங்கள் விபத்துகளை அதிகம் சந்தித்துள்ளன.

கேரளாவுக்கு சுற்றுலா வந்த ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி வந்து கால்வாயில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விவரம் வருமாறு:- ஐதராபாத்தை சேர்ந்த பெண் உள்பட 4 பேர் நேற்று முன்தினம் ஒரு சொகுசு காரில் கேரளாவுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் நேற்று அதிகாலை 3 மணிக்கு மூணாரில் இருந்து ஆலப்புழாவுக்கு காரில் புறப்பட்டனர். வழி தெரியாததால் கூகுள் மேப் பார்த்து காரை ஓட்டி வந்தனர்.

கார் கோட்டயம் அருகே குருப்பந்தரா என்ற இடத்தில் வந்த போது சாலை இரண்டாக பிரிந்தது. அப்போது கூகுள் மேப் காட்டிய பாதையில் காரை செலுத்தினர். அங்கு மழை காரணமாக சாலையை மூழ்கடித்த நிலையில் கால்வாய் நீர் பாய்ந்து கொண்டிருந்தது. இதுகுறித்து உள்ளூர் மக்களுக்கு தெரியும் என்பதால் அவர்கள் அந்த சாலையை பயன்படுத்தாமல் மாற்றுப்பாதையில் சென்று வந்தனர்.

ஆனால், கூகுள்மேப்பை பார்த்து வந்த கார் கால்வாயில் பாய்ந்தது. அத்துடன் கார் சுமார் 200 மீட்டர் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டது. காரில் இருந்தவர்கள் அலறினர். சிறிது நேரத்தில் கார் கரையை தட்டியவாறு நின்றது. உடனே காரில் இருந்தவர்கள் சுதாரித்து கொண்டு கதவை திறந்து வெளியே வந்தனர். இதனால் அவர்கள் அனைவரும் உயிர் தப்பினர்.

இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த பொதுமக்கள் காரை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு படையினர் வந்து நீண்ட நேரம் போராடி நேற்று பகல் 11 மணியளவில் காரை மீட்டனர். கேரளாவில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கூகுள் மேப்பை பார்த்து சென்ற 2 டாக்டர்கள் காருடன் ஆற்றுக்குள் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்