குஜராத் கலவரம்: தீஸ்தா செடல்வாட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால பாதுகாப்பு வழங்கியது

குஜராத் கலவரத்தில் தீஸ்தா செடல்வாட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால பாதுகாப்பு வழங்கி உள்ளது.

Update: 2023-07-01 17:26 GMT

புதுடெல்லி,

கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக அப்போது மாநில முதல்-மந்திரியாக இருந்த, பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என தீர்ப்பில் கூறப்பட்டது.

இதனிடையே, போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக குஜராத் சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செடல்வாட்டை ஆமதாபாத் காவல்துறையின் குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

2002-ம் ஆண்டு குஜராத் கலவர வழக்குகளில் அப்பாவி மக்களை கைது செய்ய போலியான ஆவணங்களை தயாரித்ததாக கூறி முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமார், சமூக ஆர்வலர் தீஸ்தா செடல்வாட், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை ஆமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஜூன் 25-ம் தேதி கைது செய்தனர்.

தீஸ்தா செடல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்தது உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீஸ்தா செடல்வாட் தனக்கு ஜாமீன் வழங்கும்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு செப்டம்பர் 2-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இதனை தொடர்ந்து தீஸ்தா செடல்வாட் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். பின்னர், அவர் குஜராத் ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் கடந்த சில மாதங்களாக தீஸ்தா செடல்வாட்டின் ஜாமீனை ஐகோர்ட்டு நீடித்து வந்தது.

இந்நிலையில், தீஸ்தா செடல்வாட்டின் ஜாமீன் மனு இன்று குஜராத் ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீஸ்தா செடல்வாட்டின் ஜாமீனை நீட்டிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது. மேலும், தீஸ்தா உடனடியாக சரணடைய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

உடனடியாக சரணடைய வேண்டும் என குஜராத் ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை எதிர்த்து தீஸ்தா செடல்வாட் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கும்படி தீஸ்தா தாக்கல் செய்த இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று மாலையே அவரச வழக்காக விசாரித்தது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பிரசாந்த் குமார், ஏ.எஸ். ஒஹா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தீஸ்தா செடல்வாட் உடனடியாக சரணடைய வேண்டும் என குஜராத் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

மேலும், தீஸ்தா செடல்வாட்டுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கவும் சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. அதேவேளை, இந்த வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றக்கோரி தலைமை நீதிபதிக்கு இரு நீதிபதிகள் அமர்வு பரிந்துரை செய்தது.

இந்த சூழலில், தீஸ்தா செடல்வாட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபாண்ணா மற்றும் திபாங்கர் தத்தா ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய ஒரு குழுவானது சிறப்பு விசாரணையின்போது இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதனால், குஜராத் ஐகோர்ட்டுக்கு 7 நாட்கள் இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், செடல்வாட்டுக்கு இடைக்கால நிவாரணம் அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, அவருக்கு 7 நாட்கள் இடைக்கால பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்