சிறையில் இருந்து பணியாற்றுவதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்- கெஜ்ரிவால் மீது ராஜ்நாத்சிங் தாக்கு

வீட்டில் இருந்து பணியாற்றுவதை கேள்விப்பட்டுள்ளேன். சிறையில் இருந்து பணியாற்றுவதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன் என்று ராஜ்நாத்சிங் கூறினார்.

Update: 2024-05-27 03:42 GMT

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலம் கன்னா பகுதியில் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:- பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆளுங்கட்சியாக இருக்கிறது. அது என்ன வேலை செய்கிறது என்பதை சொல்ல தேவையில்லை. டெல்லியிலும் ஆம் ஆத்மி அரசு நடக்கிறது. ஆனால் அதன் முதல்-மந்திரி (அரவிந்த் கெஜ்ரிவால்) மதுபான ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.ஒரு தலைவருக்கு, தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடும்வரை எந்த பதவியிலும் இருக்க மாட்டேன் என்று பதவி விலகும் துணிச்சல் இருக்க வேண்டும். அதுதான் தார்மீகம்.

ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் ''பதவியில் தொடர்ந்து நீடிப்பேன், சிறையில் இருந்தே பணியாற்றுவேன்'' என்று அறிவித்தார். அலுவலகத்தில் பணியாற்றுவது நமக்கு தெரியும். வீட்டில் இருந்து பணியாற்றுவதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் சிறையில் இருந்து பணியாற்றுவதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

காந்தியவாதி அன்னா ஹசாரேவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு இயக்கம் நடத்தினார். அப்போது அவரிடம், ''காங்கிரசின் ஊழலுக்கு எதிராக இயக்கம் நடத்துகிறோம். அதன் வெற்றியை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தக்கூடாது. அரசியல் கட்சி தொடங்கக்கூடாது'' என்று அன்னா ஹசாரே கூறினார். ஆனால், குரு சொன்னதை கெஜ்ரிவால் கேட்கவில்லை. ஆம் ஆத்மியை தொடங்கினார்.

முதல்-மந்திரி ஆன பிறகு அரசு பங்களாவில் குடியிருக்க மாட்டேன் என்றும் அவர் அறிவித்தார். ஆனால் அப்படி தங்கியதுடன், அதை அரசு பணத்தை செலவிட்டு, மாளிகை போல் மாற்றினார்.கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி பெண் எம்.பி. சுவாதி மாலிவால் தாக்கப்பட்டார். அதுபற்றி 15 நாட்களாக கெஜ்ரிவால் மவுனம் சாதிக்கிறார். பெண்களை மதிப்பது இந்திய கலாசாரம். இப்படிப்பட்ட நபர் முதல்-மந்திரியாக நீடிக்க உரிமை இருக்கிறதா?இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்