யூ-டியூப் சேனலுக்கு அதிக சந்தாதாரர்களை பிடிக்க பணத்தை அள்ளி வீசினேன்

மேம்பாலத்தில் நின்று ரூபாய் நோட்டுகளை வீசிய விவகாரத்தில் கைதான தொழில் அதிபர், யூ-டியூப் சேனலுக்கு அதிக சந்தாதாரர்களை பிடிக்கவே பணத்தை அள்ளி வீசியதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2023-01-25 16:33 GMT

பெங்களூரு:

மேம்பாலத்தில் இருந்து பணமழை

பெங்களூருவில் கே.ஆர். மார்க்கெட் பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்தால் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் நேற்று முன்தினம் மார்க்கெட் பகுதியில் உள்ள மேம்பாலம் வழியாக ஸ்கூட்டரில் கோர்ட்-சூட் அணிந்த வாலிபர், தனது கழுத்தில் சுவர் கடிகாரத்தை அணிந்தபடி வந்திறங்கினார். மேம்பாலத்தில் ஸ்கூட்டரை நிறுத்திய அவர், தான் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை எடுத்து திடீரென்று கீழே உள்ள சாலையில் வீசினார். திடீரென பணமழை பொழிந்ததால் அப்பகுதியில் நடந்து சென்ற மக்கள் திரண்டு வந்து பணத்தை எடுக்க போட்டா போட்டி போட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கே.ஆர்.மார்க்கெட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து ஸ்கூட்டரில் தப்பி சென்றுவிட்டார். இதற்கிடையே வாலிபர் மேம்பாலத்தில் நின்று பணத்தை அள்ளி வீசிய காட்சிகளை அந்த பகுதியில் நின்றவர்கள் தங்கள் செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

கைது

அதன் அடிப்படையில் போலீசார் தாமாக வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெங்களூரு நாகரபாவியை சேர்ந்த அருண் என்பது தெரிந்தது. மேலும், அவர் யூ-டியூப் சேனல் நடத்தி வருவதும், தனியார் மேலாண்மை நிறுவனம் ஒன்றின் நிறுவனர் மற்றும் செயல்அதிகாரி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகவும் அவரை போலீசார் கைது செய்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

எதற்காக பணத்தை சாலையில் வீசினார் என்பது குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அருண் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

அதில் நான் சொந்தமாக யூ-டியூப் சேனல் நடத்தி வருகிறேன். ஆனால் எனக்கு சந்தாதாரர்கள் குறைவாக உள்ளனர். எனவே நான் பிரபலம் ஆக ஆசைப்பட்டேன். இதற்காக நான் மேம்பாலத்தில் இருந்து பணத்தை அள்ளி வீசினேன். 10 ரூபாய் நோட்டுகளாக ரூ.4,500-யை இவ்வாறு வீசினேன். இவ்வாறு செய்தால் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். இந்த வீடியோவை பதிவிட்டால் எனது யூ-டியூப் சேனலுக்கு அதிக சந்தாதாரர்கள் கிடைப்பார்கள் என நம்பினேன்.

ஆனால் தற்போது பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக போலீசார் கைது செய்துவிட்டனர் என அவர் கூறி புலம்பியதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்