'தென்கிழக்கு ஆசியாவின் தலைமையிடமாக இந்தியா இருக்க வேண்டும் என விரும்புகிறேன்' - பிரதமர் மோடி

தென்கிழக்கு ஆசியாவிற்கு தலைமை தாங்கும் நாடாக இந்தியா இருக்க வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-10 15:25 GMT

புதுடெல்லி,

இந்தியாவின் வளர்ச்சி யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், இந்தியா வளர்ச்சி அடைந்தால் உலகத்தின் பாரம் குறையும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

"தென்கிழக்கு ஆசியாவின் தலைமையிடமாக இந்தியா இருக்க வேண்டும் என விரும்புகிறேன். நமக்கு ஏன் அத்தகைய அணுகுமுறை இருக்கக் கூடாது? உலகின் அனைத்து நாடுகளும் நம்முடன் சேர்வதற்கு ஏன் விரும்பக் கூடாது?

நம்மால் நமது கொல்கத்தா அல்லது கவுகாத்தியை மிகப்பெரிய மையங்களாக மாற்ற முடியும். தென்கிழக்கு ஆசியாவை ஈர்க்கக் கூடிய இடமாக கொல்கத்தாவை நம்மால் உருவாக்க முடியும். இந்தியாவின் வளர்ச்சி யாருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது.

இன்று இந்தியா பலமான நாடாக மாறும்போது உலக நாடுகள் அச்சம் கொள்வதில்லை. மாறாக உலகம் மகிழ்ச்சி அடைகிறது. இந்தியா வளர்ச்சி அடைந்தால் உலகத்தின் பாரம் குறையும்.

கழிப்பறைகளை கட்டியதன் மூலம் நாம் உருவாக்கிய மாற்றத்தால், உலக அளவில் கழிப்பறைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக மக்கள் உணர்கின்றனர். நாம் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம் மற்றும் சூரிய சக்தி பயன்பாட்டையும் அதிகரித்து வருகிறோம்.

இதன் மூலம் சர்வதேச தரவரிசைகளில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துகிறோம். இதனால் இந்தியாவை உலகம் விரும்புகிறது. இந்தியா சிறப்பாக செயல்பட்டால், உலக அளவில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ்கின்றன.

உலகின் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டின் இளைஞர்களிடமும், நிறுவனங்களிடமும் இந்தியா ஒரு வாய்ப்புகளின் சுரங்கம் என்று கூறி வருகின்றன. நாம் ஆப்பிரிக்காவை ஜி-20 உறுப்பினர் ஆக்கினோம். நாம் வெறும் பார்வையாளராக இருக்காமல், பயனுள்ள உதவிகளை செய்கிறோம். இந்தியாவுடன் நெருக்கமாக வேண்டும் என்பதில் உலக நாடுகளிடையே இன்று போட்டி நிலவுகிறது."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்