மங்களூருவில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

மங்களூருவில் கடனை திரும்ப கேட்டு நண்பர் தொல்லை கொடுத்து வந்ததால் மனம் உடைந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-22 18:45 GMT

மங்களூரு-

மங்களூருவில் கடனை திரும்ப கேட்டு நண்பர் தொல்லை கொடுத்து வந்ததால் மனம் உடைந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் தற்கொலை செய்தவர் எழுதிய கடிதத்தில் நண்பர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

தனியார் நிறுவனம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் காபிக்காடு சத்தியநாராயணன் பகுதியை சேர்ந்தவர் நிதின் பூஜாரி (வயது36). இவர் மங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவருடன் மங்களூருவை சேர்ந்த பிரவீன் ஷெட்டி செம்புகுட்டே என்பவரும் பணிபுரிந்து வந்தார்.

இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிதின், பிரவீனிடம் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் பிரவீன் கொடுத்த பணத்தை நிதினிடம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.

இதனால் நிதின் மனமுடைந்து காணப்பட்டார். இந்தநிலையில், நேற்று வேலை செய்யும் இடத்தில் பிரவீன், நிதினிடம் பணத்தை தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் ஒரு சில நாட்களில் தருகிறேன் என கூறியுள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதையடுத்து நிதின் அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு சென்றார். இதுகுறித்து வீட்டில் இருந்தவர்களிடம் அவர் கூறியுள்ளார். அதற்கு அவர்கள் ஒரு மாதத்தில் ரூ.20 ஆயிரத்தை கொடுத்து விடலாம் என அவரிடம் கூறினர்.

பின்னர் மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிதின் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களூரு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிதினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அவர் தற்கொலை செய்து கொண்ட அறையில் நிதின் எழுதிவைத்திருந்த ஒரு உருக்கமான கடிதம் சிக்கியது.

போலீஸ் விசாரணை

அதில், எனது சாவுக்கு காரணம் பிரவீன் தான். அவர் என்னை மனரீதியாக துன்புறுத்தி உள்ளார். அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் பிரவீனிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து மங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்