தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிரான வருமானவரி வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை

தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிரான வருமானவரி வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

Update: 2023-08-14 19:01 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

கடந்த 2012-13-ம் நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததுடன், 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய பின், வருமானவரி செலுத்தியுள்ளதாக கூறி, தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிராக வேலூர் கோர்ட்டில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் கதிர் ஆனந்த் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வேலூர் கோர்ட்டில் உள்ள வழக்கு விசாரணையில் தலையிட முடியாது எனக்கூறி, கதிர் ஆனந்த் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு எதிராக கதிர் ஆனந்த் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

கதிர் ஆனந்த் சார்பில் மூத்த வக்கீல்கள் எஸ்.கணேஷ், பி.வில்சன் ஆஜராகி, 'மனுதாரர் நிலுவையில் இருந்த வருமானவரியை அபராதம், வட்டியுடன் தாக்கல் செய்ததை சென்னை ஐகோர்ட்டு கருத்தில் கொள்ளவில்லை. தானாக முன்வந்து வருமானவரி செலுத்துவோர் மீது கிரிமினல் வழக்கு தொடர முடியாது என்ற தீர்ப்புகளை சென்னை ஐகோர்ட் பரிசீலிக்க தவறிவிட்டது' என வாதிட்டனர்.

வாதத்தை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டதுடன், வேலூர் கோர்ட்டில் உள்ள வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்தது.

Tags:    

மேலும் செய்திகள்