"ஆபரேஷன் அஜய்" மூலம் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடக்கம்

இஸ்ரேலில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு வசதியாக "ஆபரேஷன் அஜய்" திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது.

Update: 2023-10-12 03:03 GMT

புதுடெல்லி,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியிலும் புகுந்து அந்த பகுதியில் இருந்த மக்களை தாக்கியது. இதில், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்து வருகிறது.

காசா பகுதியில் உள்ள கட்டிடங்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல்களை நடத்துகிறது. இதுவரை இஸ்ரேல் மக்கள் 900 பேரும், பாலஸ்தீனிய மக்கள் 770 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போர் நிலவரம் குறித்து கூறியுள்ளார். இஸ்ரேலில் 18,000 இந்தியர்கள் உள்ளனர். இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசும், வெளியுறவு துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், "ஆபரேஷன் அஜய்" திட்டம் மூலம் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"இஸ்ரேலில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு வசதியாக ஆபரேஷன் அஜய் தொடங்கப்படுகிறது. அவர்களுக்காக சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வெளிநாட்டில் உள்ள எங்கள் நாட்டினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இஸ்ரேலில் இருந்து இந்தியா செல்வதற்காக பதிவு செய்துள்ள இந்தியர்கள், நாளை முதல் சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று இஸ்ரேலில் உள்ள நாட்டின் தூதரகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்