விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்திய விவகாரம் - இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.50 கோடி அபராதம்

இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையத்துக்கு சிவில் விமான பாதுகாப்பு பணியகம் நோட்டீஸ் அனுப்பியது.

Update: 2024-01-17 17:48 GMT

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடும் பனி மூட்டம் நிலவியதால் விமான சேவை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான விமானங்கள் பல மணி நேர தாமதத்திற்கு பிறகே இயக்கப்பட்டன. கோவாவில் இருந்து டெல்லி வந்த இண்டிகோ விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது.

மும்பையில் அந்த விமானம் தரையிறங்கியதும், அதில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கி ஓடுபாதைக்கு அருகில் உள்ள டார்மாக் பகுதியில் அமர்ந்து உணவு உண்டனர். இந்த வீடியோ வைரலான நிலையில், விமான நிறுவனம் மீதும், மும்பை விமான நிலையம் மீதும் புகார் எழுந்தது.

விமான ஓடுபாதையின் அருகில் பயணிகள் அமர்ந்து சாப்பிட்ட சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையத்துக்கு சிவில் விமான பாதுகாப்பு பணியகம் (பி.சி.ஏ.எஸ்.) நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனத்திற்கு சிவில் விமான பாதுகாப்பு பணியகம் ரூ.1.20 கோடியும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (டி.ஜி.சி.ஏ.) ரூ.30 லட்சமும் அபராதம் விதித்துள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்