மழை பாதித்த பகுதிகளில் கர்நாடக முதல்-மந்திரி 'போட்டோ ஷூட்' நடத்துகிறார்- குமாரசாமி

பெங்களூருவில் மழை பாதித்த பகுதிகளில் முதல்-மந்திரி ‘போட்டோ ஷூட்’ மட்டும் தான் நடத்துகிறார் என குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2022-05-21 20:19 GMT

குமாரசாமி பார்வையிட்டார்

பெங்களூருவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. மழையால் பாதித்த பகுதிகளை 2-வது நாளாக நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பார்வையிட்டார். நாகவாரா ரிங் ரோடு, தனிச்சந்திரா, ஹெப்பால் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று காலையில் சென்ற அவர், மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.

பின்னர் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மாநகராட்சி நிதி முறைகேடு

பெங்களூருவில் கொட்டி தீர்த்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. மக்கள் தங்களுக்கு சொந்தமான பொருட்களை இழந்து பரிதவிக்கின்றனர். பெங்களூருவில் 7 மந்திரிகள் உள்ளனர். அவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அரசுக்கும், மாநகராட்சிக்கும் இடையே பணப்பிரச்சினை இல்லை. ஆனால் மாநகராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதி அனைத்தும் முறைகேடு செய்யப்படுகிறது.

பெங்களூருவில் நடைபெறும் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் தரமானதாக இல்லை என்பது தெரியவந்துள்ளது.

'போட்டோ ஷூட்' நடத்துகிறார்

பெங்களூருவில் அளவுக்கு அதிகமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும், மாநகராட்சியும், அரசும் என்ன செய்து கொண்டிருந்தது என்று தெரியவில்லை.

பெங்களூருவில் மழை பாதித்த பகுதிகளுக்கு சென்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 'போட்டோ ஷூட்' மட்டும் தான் எடுக்கிறார். பெயரளவுக்கு சென்று போட்டோ ஷூட் எடுக்க வேண்டாம். மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனெனில் பெங்களூருவில் மழை பாதிப்புகள் குறித்த தகவல்கள் கூட அரசிடம் இல்லை. அப்படி இருக்கையில் மக்களுக்கு எப்படி இந்த அரசால் நிவாரணம் வழங்க முடியும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்