காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை; முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேட்டி

காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறியுள்ளார்.

Update: 2023-09-22 18:45 GMT

பெங்களூரு:

தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மண்டியாவில் இன்று (சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இதனால் மண்டியாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்த காவிரி விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கும்படி உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக அரசின் அதிகாரிகள் நேரடியாக கலந்து கொள்வது இல்லை. அவர்கள் காணொலி மூலம் பெங்களூருவில் இருந்தபடி கலந்து கொள்கிறார்கள். காணொலியில் கலந்து கொண்டால் நமது பணிகள் நடைபெறுமா?.

இந்த விவகாரத்தில் மாநில அரசின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை. சுப்ரீம் கோர்ட்டு தனது முடிவை அறிவித்துள்ளதால் அதுபற்றி நான் கருத்துக்கூற மாட்டேன். அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் நான் காவிரி விவகாரம் குறித்து பேசினேன். கர்நாடகத்தை சேர்ந்த வேறு எந்த கட்சியின் எம்.பி.யும் அதுபற்றி பேசவில்லை.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்