வனக்காவலர் பதவிக்கான 25 கி.மீ நடை தேர்வில் கலந்து கொண்ட இளைஞர் உயிரிழப்பு

மத்தியப் பிரதேசத்தில் வனக்காவலர் பதவிக்கான 25 கி.மீ நடை தேர்வில் கலந்து கொண்ட இளைஞர் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

Update: 2024-05-26 01:27 GMT

கோப்புப்படம் 

பாலாகாட்,

மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் வனத்துறையில் உள்ள வான் ரக்ஷக் பதவிக்கான 25 கிலோ மீட்டர் நடை தேர்வு நேற்று நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 108 விண்ணப்பதாரர்கள் இந்த உடல் தகுதித் தேர்வில் கலந்து கொண்டனர். இதில் ஷிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்த சலீம் மவுரியா (27 வயது) என்ற இளைஞர் கலந்து கொண்டார்.

இந்த தேர்வில் 25 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரத்தில் கடப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். நேற்று காலை 6 மணியளவில் நடை தேர்வு தொடங்கியது. இந்த தேர்வில் 104 பேர் குறிப்பிட்ட நேரத்திற்குள், 25 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து தேர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் சலீம் மவுரியா 22 கிலோ மீட்டர் தூரத்தை கடந்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென மோசமானது.

இதையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்