கேரளாவில் கடத்தப்பட்ட சிறுமி 20 மணி நேரத்துக்கு பிறகு மீட்பு

சிறுமியின் தாயாருக்கு போன் செய்த கடத்தல்காரர்கள் ரூ.10 லட்சம் தரும்படி மிரட்டியுள்ளனர்.

Update: 2023-11-28 09:08 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ஒயூர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி அபிஹல் சாரா ரிஜி. இந்த சிறுமி நேற்று மாலை 5 மணியளவில் தனது சகோதரனுடன் வீட்டில் இருந்து டியூசன் வகுப்புக்கு நடந்து சென்றபோது, இருவரையும் பின்தொடர்ந்து சென்ற கும்பல் சிறுமி சாராவை காரில் கடத்தி சென்றது.

பின்னர், சிறுமியின் தாயாருக்கு போன் செய்த அந்த கும்பல், சிறுமியை விடுவிக்க ரூ. 5 லட்சம் கொடுக்கும்படி கூறியுள்ளது. மேலும், போலீசாருக்கு தகவல் கொடுத்தால் விபரீதம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பின்னர், மீண்டும் போன் செய்து, ரூ.10 லட்சம் தரும்படி மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை மீட்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சிசிடிவி கேமரா பதிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த போலீசார், சிறுமி மருதனப்பள்ளி பகுதியில் வெள்ளை நிற காரில் கடத்தப்பட்டதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், 20 மணி நேரத்துக்குப் பிறகு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். இன்று மதியம் கொல்லத்தில் உள்ள பொது மைதானத்தில் சிறுமி தனியாக அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று, தனியாக இருந்த சிறுமியை மீட்டனர். கடத்தல்காரர்கள், சிறுமியை அந்த இடத்தில் விட்டுச் சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்