திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த கேரள வாலிபர் படுகொலை

பெங்களூருவில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கேரள வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெலகாவியை சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-09-06 18:45 GMT

பெங்களூரு

திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில்...

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஜாவித்(வயது 29). இவர், பெங்களூரு உளிமாவு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். செல்போன் பழுது பார்க்கும் கடையை ஜாவித் நடத்தி வந்தார். இவருக்கும், பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த ரேணுகா(24) என்பவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

பின்னர் ஜாவித்தும், ரேணுகாவும் திருமணம் செய்யாமலேயே உளிமாவு பகுதியில் ஒரே வீட்டில் கணவன், மனைவிபோல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக ஒரே வீட்டில் 2 பேரும் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு ஜாவித்தும், ரேணுகாவும் வீட்டில் படுத்து தூங்கினார்கள். நேற்று அதிகாலை 3 மணியளவில் 2 பேருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் உண்டானது.

வாலிபர் படுகொலை

அப்போது வீட்டில் கிடந்த கத்தியை எடுத்து ஜாவித்தை சரமாரியாக ரேணுகா குத்தியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த ஜாவித் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

உடனே அக்கம் பக்கத்தினர் ஜாவித்தை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் செல்லும் வழியிலேயே ஜாவித் இறந்து விட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் உளிமாவு போலீசார் விரைந்து சென்று ஜாவித்தின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

கைது

ஜாவித்தும், ரேணுகாவும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், அவர்கள் 2 பேருக்கும் திருமண விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாகவும் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து உளிமாவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரேணுகாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்