ஜார்கண்ட் கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றார்

ஜார்கண்ட் மாநில கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றார். மாநிலம் அனைத்து துறையிலும் வளர்ச்சி அடைவதை உறுதி செய்வேன் என சூளுரைத்தார்.

Update: 2023-02-18 17:55 GMT

ஜார்கண்ட் கவர்னராக நியமனம்

நாட்டில் 13 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 12-ந் தேதி உத்தரவிட்டார். அந்த உத்தரவில் ஜார்கண்ட் மாநில கவர்னராக பதவி வகித்து வந்த ரமேஷ் பயஸ், மராட்டிய மாநில கவர்னராக மாற்றப்பட்டார். ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய கவர்னராக தமிழ்நாட்டில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய சி.பி.ராதாகிருஷ்ணன் (65) நியமிக்கப்பட்டார்.

இதன் மூலம் தற்போது டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் (தெலுங்கானா-புதுச்சேரி), இல. கணேசன் (நாகாலாந்து) ஆகியோரைத் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் இருந்து கவர்னராகி உள்ள 3-வது தலைவர் என்ற பெயரைப் பெறுகிறார். அவருக்கு தமிழ்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து கவர்னர் பதவி ஏற்பதற்காக சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சிக்கு புறப்பட்டுச்சென்றார்.

பதவி ஏற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்

இந்த நிலையில் ராஞ்சியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய கவர்னர் பதவி ஏற்பு விழா நடந்தது. இந்த விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் மாநிலத்தின் 11-வது கவர்னராக பதவி ஏற்றார். அவருக்கு அந்த மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த விழாவில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், சபாநாயகர் ரவீந்திரநாத் மஹ்தோ, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி

பதவி ஏற்ற பின்னர் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், "ஜார்கண்ட் மாநில கவர்னராக பதவி ஏற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மாநிலத்தில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வதே எனது முதன்மையான இலக்கு. ஏழ்மையை ஒழிப்பதற்கான ஒரே வழி, வளர்ச்சிதான்" என கூறினார்.

கவர்னர் பதவி ஏற்றதும், ஜார்கண்ட், பழங்குடி மக்கள் பெருவாரியாக வாழக்கூடிய மாநிலம் என்பதால், அந்த சமூக மக்களின் தலைவராக விளங்கிய பிர்சா முண்டா பிறந்த குந்தி மாவட்டத்தில் உள்ள உலிஹாட்டு கிராமத்துக்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சென்று பார்வையிட்டார்.

முதல்-மந்திரி வாழ்த்து

ஜார்கண்ட் புதிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் டுவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர், "மாநிலத்தின் அனைத்து துறை வளர்ச்சியிலும் உங்கள் வழிகாட்டுதல் மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்