புதிதாக பரவும் 'ஜேஎன்.1' வகை கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 760 பேருக்கு தொற்று

பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது என சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-04 07:23 GMT

புதுடெல்லி,

கொரோனாவின் புதிய வகையான 'ஜேஎன்.1' வகை தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது. பல்வேறு உலக நாடுகளில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்றுடன் பிற நோய்த் தொற்றுகளின் அதிகரிப்புக்கும் இந்த திரிபு காரணமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 760 பேருக்கு 'ஜேஎன்.1' கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை 5,33,373 ஆக பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் கேரளாவை சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளளது.

இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,423 ஆக உயர்ந்தது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4,44,78,047 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, நேற்றைய தினம் 775 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனை தொடர்ந்து நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4.4 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்