மணிப்பூரில் தொடர்ந்து நீடிக்கும் ஊரடங்கு - ராணுவம் கண்காணிப்பு

மணிப்பூரில் கலவரத்தால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் வீடு திரும்பி வருகிறார்கள். அங்கு ஊரடங்கு நீடிக்கிறது.

Update: 2023-05-09 21:28 GMT

இம்பால்,

மணிப்பூரில், பெரும்பான்மையாக உள்ள 'மெய்தி' இன மக்கள் பழங்குடியின அந்தஸ்து கோரி வருவதற்கு எதிராக பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தினர். அதில் ஏற்பட்ட வன்முறையால் இருதரப்புக்கும் இடையே கலவரம் வெடித்தது.

கலவரத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மணிப்பூரில் இயல்புநிலை திரும்பி வருகிறது. பெரிதும் பாதிக்கப்பட்ட சுரசந்த்பூர், டெங்னோபால், பிஷன்பூர், கங்க்போக்பி ஆகிய மாவட்டங்களில் அமைதி நிலவுகிறது.

ஊரடங்கு தளர்வு

அங்கு மக்கள் வீடுகளுக்கு திரும்பினர். நிவாரண முகாம்களில் உள்ள 1,700 பேரை இன்னும் வீடுகளில் குடியமர்த்த வேண்டி உள்ளது.

மாநிலத்தில் இன்னும் ஊரடங்கு நீடிக்கிறது. இருப்பினும், மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக இன்று (புதன்கிழமை) காலை 5 மணி முதல் 11 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. ஆனால், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகிறார்கள்.

கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு நீடிக்கிறது. இணையதள சேவைக்கான தடை நீடிக்கிறது. இதனால், மக்கள் தகவல்களை தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.

உயர்மட்ட விசாரணை

தற்போதைய நிலவரம் குறித்து முதல்-மந்திரி பிரேன்சிங் கூறியதாவது:-

கலவரத்துக்கு பொறுப்பானவர்களை கண்டறிய உயர்மட்ட விசாரணை நடத்தப்படும். பிரச்சினையை தீர்க்க 24 மணி நேரமும் அரசு எந்திரம் இயங்கி வருகிறது.

50 கம்பெனி மத்திய ஆயுத போலீஸ் படையும், ராணுவமும், 30 ஆயிரம் மாநில போலீசாரும் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

நிதியுதவி

நிவாரண முகாம்களில் இருந்து சுமார் 20 ஆயிரம்பேர், வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். 1,593 பேர் வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டனர்.

கலவரத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்