12 மணி நேரத்தில் 2,000-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் - ராஜஸ்தானில் உலக சாதனை

ராஜஸ்தானில் 12 மணி நேரத்தில் 2,000-க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமணம் செய்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-11 10:59 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் 12 மணி நேரத்தில் 2,000-க்கும் மேற்பட்ட தம்பதிகள் திருமணம் செய்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பாரனில் கடந்த மே மாதம் 26-ந்தேதி 2,413 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். இது 12 மணி நேரத்தில் செய்யப்பட்ட அதிக திருமணங்கள் என்ற வகையில் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது. முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு ஏமனில் 963 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். இதுவே 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட அதிக திருமணங்கள் என்ற சாதனையை படைத்திருந்தது.

ஸ்ரீ மஹாவீர் கோஷாலா கல்யாண் சன்ஸ்தான் என்ற அறக்கட்டளையின் சார்பில் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு சேவை செய்யும் வகையில் இந்த திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு ஜோடிக்கும் அரசு அதிகாரிகள் திருமணச் சான்றிதழை வழங்கினர். ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் மற்றும் கேபினட் மந்திரி பிரமோத் ஜெயின் பயா ஆகியோர் தம்பதிகளுக்கு தங்கள் ஆசிகளை வழங்கினர்.

ஒவ்வொரு ஜோடிக்கும் மணப்பெண்ணுக்கான நகைகள், மெத்தை, சமையல் பாத்திரங்கள், டிவி, குளிர்சாதனப் பெட்டி, குக்கர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட பலவிதமான பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் உணவும் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்