இந்திய ஜனநாயகம் ஆழமடைந்துள்ளது என்பதற்கு கிரிக்கெட்டும் அரசியலும் சிறந்த உதாரணங்கள்: மந்திரி ஜெய்சங்கர்

மோடி போன்ற ஒருவர் இந்தியாவின் பிரதமராக மாறியது நாடு எவ்வளவு மாறிவிட்டது என்பதை காட்டுகிறது என்று மந்திரி ஜெய்சங்கர் பேசினார்.

Update: 2022-09-23 09:00 GMT

நியூயார்க்,

இந்தியாவில் ஜனநாயகம் ஆழமடைந்துள்ளது என்பதற்கு அரசியலும் கிரிக்கெட் விளையாட்டும் சிறந்த உதாரணங்கள் மற்றும் அதற்கான ஆதாரமாக விளங்குகின்றன என்று வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.

அமெரிக்காவில் நடந்த "மோடி@20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி" என்ற புத்தக வெளியீடு தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் இந்தோ-அமெரிக்கன் ஆர்ட்ஸ் கவுன்சில் (ஐஏஏசி) துணைத் தலைவர் ராகேஷ் கவுலுடன் உரையாடியபோது கேள்விகளுக்கு பதிலளித்த மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:-

இந்திய நாடாளுமன்றம், அமைச்சரவை, அரசியலில் உள்ளவர்கள் மற்றும் கிரிக்கெட் அணியைப் பார்க்கும்போது, இவர்களை 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இடத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். 10 ஆண்டுகள் அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இடத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

நமது அரசியல் வர்க்கம் எவ்வளவு குறுகியதாக இருந்தது என்பது புலப்படும். ஆனாலும், மிகவும் திறமையானவர்கள் இருந்தனர், அவர்களில் பலர் அற்புதமான விஷயங்களைச் செய்தார்கள்.அதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை.

அதே வேளை, இன்று அரசியலில் இருப்பவர்களின் தோற்றத்தைப் பார்த்தால், அவர்கள் எந்த ஊர், எங்கு படித்தார்கள், அவர்களின் பின்னணி என்ன, எந்த மொழியில் அவர்கள் மிகவும் புலமையாக இருக்கிறார்கள், அவர்களின் சமூகப் பழக்கவழக்கங்கள் என்ன? இது மிகவும் வித்தியாசமானது.

இந்திய அரசியலும் இந்திய கிரிக்கெட் அணியும் ஜனநாயகம் ஆழமடைந்துள்ளது மற்றும் அது உண்மையில் வேலை செய்கிறது என்பதற்கான இரண்டு உள்ளடக்கிய எடுத்துக்காட்டுகள் மற்றும் சான்றுகள்.

அந்த மாற்றத்தின் விளைபொருளே பிரதமர் மோடி தான். அவரைப் போன்ற ஒருவர் இறுதியில் இந்தியாவின் பிரதமராக வந்திருப்பது, நாடு எந்தளவுக்கு மாறிவிட்டது என்பதைக் காட்டுகிறது.

இந்தியாவில் வாக்களிக்க செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மேலும் வாக்களிக்கும் பெண்களின் எண்ணிக்கை இன்னும் வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்தியா என்பது தேர்தல்கள் மதிக்கப்படும் ஒரு நாடு. அதில் மக்கள் வெற்றி பெறுகிறார்கள், மக்கள் தோற்கிறார்கள், ஆனால், இந்த செயல்முறையை யாரும் சவால் செய்ய மாட்டார்கள். இந்தியர்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்தியர்கள் நம்பிக்கையுடன் இருப்பதற்கு நல்ல காரணமும் இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்