சுவரில் எழுதப்பட்ட காலிஸ்தான் ஆதரவு வாசகம்.. டெல்லியில் பரபரப்பு

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவோம் என காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான எஸ்எப்ஜே தெரிவித்திருந்தது.

Update: 2024-01-19 10:14 GMT

புதுடெல்லி:

பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் எனும் தனி நாடாக அறிவிக்கக் கோரி, காலிஸ்தான் ஆதரவாளர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப் உட்பட பல்வேறு மாநிலங்களில் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி உள்ளனர்.

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவோம் என அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான எஸ்எப்ஜே தெரிவித்திருந்தது. அந்த அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன், தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக மிரட்டல் விடுத்து வருகிறார். ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் காலிஸ்தான் கொடி ஏற்றுவோம் என்று சமீபத்தில் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லியின் உத்தம் நகரில் உள்ள ஒரு சுவரில் காலிஸ்தானுக்கு ஆதரவாக வாசகங்களை சிலர் எழுதி உள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி நிஹல் விகார் பகுதியில் ஒரு தூணில் இதேபோன்ற வாசகம் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று, அந்த நாடுகளின் குடியுரிமை பெற்று, அங்கு சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்