முக்தார் அன்சாரி சிறையில் உயிரிழப்பு... கொலையா? மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உத்தரவு

முக்தார் அன்சாரிக்கு விஷம் கொடுத்ததாக குடும்பத்தினர் கூறும் குற்றச்சாட்டை சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

Update: 2024-03-29 11:46 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் கேங்ஸ்டர்-ஆக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் முக்தர் அன்சாரி. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர், மௌ சதார் தொகுதியில் போட்டியிட்டு ஐந்து முறை வெற்றி பெற்றவர்.

இவர் மீது 60க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. உ.பி.யின் வெவ்வேறு நீதிமன்றங்களால் செப்டம்பர் 2022 முதல் எட்டு வழக்குகளில் அன்சாரிக்கு தண்டனை விதிக்கப்பட்டு பாண்டா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த முக்தார் அன்சாரி, மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில் முக்தார் அன்சாரியின் மகன் உமர் அன்சாரி, தனது தந்தைக்கு சிறையில் 'விஷம்' கொடுத்து கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கோர்ட்டை நாடுவோம் என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக, சிறைக்குள் அவருக்கு விஷம் கலந்த உணவு வழங்கப்பட்டதாகவும், அதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் அன்சாரியின் வழக்கறிஞர் குற்றம் சாட்டி இருந்தார். இந்த சூழலில், அவர் திடீரென உயிரிழந்துள்ளதால், மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

ஆனால், விஷம் கொடுத்ததாக குடும்பத்தினர் கூறும் குற்றச்சாட்டை சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதனால், முக்தார் அன்சாரியின் மரணம் தொடர்பாக 3 பேர் கொண்ட குழுவினால் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்படும் என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

அன்சாரியின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் தேவைப்பட்டால் அவரது உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே முகமதாபாத் மயானத்தில் அன்சாரியின் இறுதி சடங்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே உத்தரப்பிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பெரிய கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முக்தார் அன்சாரியின் ஆதிக்கம் மிகுந்த மவூ, காஜிபூர், வாரணாசி மற்றும் ஜான்பூர் ஆகிய மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்