சாகரில் வியாபாரியிடம் ரூ.8 லட்சம் நூதன மோசடி

சாகர் டவுனில் வியாபாரியிடம் ரூ.8 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2023-07-14 18:45 GMT

சிவமொக்கா-

சாகர் டவுனில் வியாபாரியிடம் ரூ.8 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

வியாபாரி

சிவமொக்கா மாவட்டம் சாகர் டவுன் பகுதியில் வசித்து வருபவர் ஷெரீப். வியாபாரியான இவர் சாகர் டவுனில் உள்ள ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரை மர்மநபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உங்களது வங்கி கணக்குடன் பான் கார்டு விவரங்களை இணைக்க வேண்டி உள்ளது, அதனால் அந்த விவரங்களை தாருங்கள் என்று கேட்டுள்ளார்.

அவர் கூறியதை நம்பிய ஷெரீப் தன்னுடைய பான் கார்டு விவரங்கள், ஆதார் கார்டு விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் தன்னுடைய செல்போன் எண்ணுக்கு வந்த ஒற்றை கடவுச்சொல்(ஓ.டி.பி.) ஆகியவற்றை கூறி இருக்கிறார்.

நூதன முறையில் மோசடி

இதையடுத்து ஒருசில நிமிடங்களில் ஷெரீப்பின் செல்போன் எண்ணிற்கு அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.7.80 லட்சம் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷெரீப் உடனடியாக தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்றார். பின்னர் அவர் வங்கி அதிகாரிகளை சந்தித்து தனக்கு வந்த குறுந்தகவல் குறித்தும், மர்ம நபர் பான் கார்டு விவரங்களை கேட்டது குறித்தும் தெரிவித்தார்.

அப்போது வங்கி அதிகாரிகள், தாங்கள் யாரும் அதுபோன்ற தகவல்களை கேட்பதில்லை என்றும், இதுபற்றி போலீசில் புகார் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினர். அப்போது தான் மர்ம நபர் தன்னை நூதன முறையில் ஏமாற்றி மோசடி செய்ததை ஷெரீப் உணர்ந்தார்.

போலீசில் புகார்

பின்னர் அவர் இதுபற்றி சாகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் அந்த மர்ம நபரையும் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்