அரசியல் கட்சிகளின் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் இன்று சமர்ப்பிக்கும் எஸ்.பி.ஐ. வங்கி

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பத்திர விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி இன்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளது.

Update: 2024-03-12 02:46 GMT

டெல்லி,

தனிநபர்கள், நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக நிதி வழங்கும் வகையில் தேர்தல் பத்திரங்கள் திட்டம் கொண்டுவரப்பட்டது.

எஸ்.பி.ஐ. வங்கி மூலம் இந்த தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெருமளவு நன்கொடையை பெற்று குவித்தன.

இதனிடையே, தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதிபெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15ம் தேதி ரத்து செய்தது.

மேலும், 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் தற்போதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? அரசியல் கட்சிகளுக்கு யார்? யார்? நிதி கொடுத்துள்ளனர் என்ற விவரத்தை மார்ச் 6ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15ம் தேதி உத்தரவிட்டது.

ஆனால், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வழங்க ஜுன் 30ம் தேதி வரை கால அவகாசம் தரும்படி சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.ஐ. வங்கி மனு தாக்கல் செய்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கால அவகாசம் கோரி எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள், நன்கொடை தொகை உள்ளிட்ட விவரங்களை இன்று (மார்ச் 12) தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு எஸ்.பி.ஐ. வங்கிக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

எஸ்.பி.ஐ. வங்கி சமர்ப்பிக்கும் தகவல்களை தொகுத்து 15ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நிறைவேற்ற தவறினால் எஸ்.பி.ஐ. வங்கி மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பத்திர விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி இன்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்