பயங்கரவாத செயல்களின் விவரங்களை பகிர தென்மாநில அரசுகளுக்கு கடிதம்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

பயங்கரவாத செயல்கள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தென்மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதுவேன் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-11-23 21:41 GMT

பெங்களூரு: பயங்கரவாத செயல்கள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தென்மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதுவேன் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹாசன் மாவட்டம் ஹளேபீடுவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

விரட்டியடிப்பது கடினம்

தொடர்ச்சியாக பல ஆண்டுகள் வறட்சி நிலவியதால் அண்டை மாநிலங்களில் இருந்து யானைகள் கர்நாடகத்திற்கு வந்தன. அந்த யானைகள் மீண்டும் திரும்பி செல்லவில்லை. அதனால் இங்கு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சில நேரங்களில் மனிதர்களும் காடுகளுக்கு செல்கிறார்கள். காலநிலை மாற்றம் போன்ற காரணங்களினால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. யானைகள் கூட்டமாக வந்தால் அதை விரட்டியடிப்பது கடினம்.

இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி, செயல்படைகளை அமல்படுத்தியுள்ளோம். யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க இந்த செயல்படைகள் நிரந்தரமாக செயல்படும்.

ரூ.100 கோடி நிதி

யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் பணிகளுக்கு பட்ஜெட்டில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பந்திப்பூரில் புதிய மாதிரியில் வேலிகள் அமைக்கப்படுகின்றன. யானை காரிடாரை முழுமையாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் நபர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.15 லட்சம் வழங்கப்படும்.

மேலும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். சித்தராமையா ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்கு நாங்கள் ஆதாரங்களை வெளியிட்டு வருகிறோம். அது உண்மை இல்லையா?. உண்மையை அவர் எதிர்கொள்ள வேண்டும். அதை விடுத்து தனது ஆட்சி காலத்தில் ஊழல்கள் நடக்கவில்லை என்று பேசுவது சரியல்ல.

கடிதம் எழுதுவேன்

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 'சிலிப்பர் செல்'களை கண்டறிந்து அவர்களை திகார் சிறைக்கு அனுப்பியுள்ளோம். அண்டை மாநிலம் மற்றும் எல்லை தாண்டி பயிற்சி பெற்று வந்து இங்கு தாக்குதலுக்கு முயற்சி செய்வது தொடர்ந்து நடக்கிறது. நாட்டில் மோடி பிரதமரான பிறகு எங்கும் பயங்கரவாத தாக்குதல் நடக்கவில்லை. முன்பு பெங்களூரு, ஐதராபாத், மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. அவற்றுக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் 'சிலிப்பர் செல்'களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

நான் போலீஸ் மந்திரியாக இருந்தபோது, இதுபோன்ற தேச விரோத செயல்களில் ஈடுபடுகிறவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும், அதுதொடர்பான விவரங்களை தென்இந்திய மாநிலங்களுடன் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்றும் போலீஸ் டி.ஜி.பி.க்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். பயங்கரவாத செயல்கள் குறித்து விவரங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக அந்த மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதுவேன். பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் சர்வதேச அளவில் தொடர்புகளை வைத்துள்ளனர். வங்காளதேச நாட்டை சேர்ந்த பலர் இங்கு வந்து குடியேறியுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு நாடு கடத்தியுள்ளோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்