பஞ்சாப்பில் அதிர்ச்சி: ஊழல் வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது; மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பஞ்சாப்பில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-06-25 14:06 GMT



சண்டிகர்,



பஞ்சாப்பில் சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த ஆம் ஆத்மி கட்சியின் அரசு நடந்து வருகிறது. இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சய் பொப்லி என்பவர் கடந்த 20ந்தேதி ஊழல் வழக்கு ஒன்றில் பஞ்சாப் ஊழல் கண்காணிப்பு உயரதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து, அவரது வீட்டில் இருந்து அதிக அளவிலான வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து ஆயுத சட்டங்களின் கீழ் வழக்கு ஒன்றும் பதிவானது. இந்நிலையில், பொப்லியின் மகனான கார்த்திக் பொப்லி இன்று மதியம் 1.30 மணியளவில் வீட்டின் முதல் தளத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

அதிகாரிகள் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தற்கொலை என்றும் விசாரணை நடந்து வருகிறது என்றும் மூத்த சண்டிகர் காவலர் ஒருவர் கூறியுள்ளார். கார்த்திக் குடும்பத்தினரின் வாக்குமூலம் பெறப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், கார்த்திக்கின் குடும்பத்தினரோ அதிகாரிகள் அவரை சுட்டு கொன்று விட்டனர் என கூறியுள்ளனர். சஞ்சயின் வீட்டில் இருந்து 12 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி கைப்பற்றப்பட்டு உள்ளது. அவற்றில் 9 தங்க கட்டிகள், 49 தங்க பிஸ்கட்டுகள், 12 தங்க நாணயங்கள், 3 வெள்ளி கட்டிகள், 18 வெள்ளி நாணயங்கள், 4 ஐபோன்கள் மற்றும் ரூ.3.5 லட்சம் பணமும் அடங்கும்.

Tags:    

மேலும் செய்திகள்