'சித்தராமையா, ஊழல்களின் தந்தை'; மந்திரி சுனில்குமார் விமர்சனம்

சித்தராமையா ஊழல்களின் தந்தை என்று மந்திரி சுனில் குமார் விமர்சித்துள்ளார்.

Update: 2022-09-26 06:00 GMT

மங்களூரு;


என்.ஐ.ஏ. சோதனை

கர்நாடக மின்சாரத்துறை மந்திரியும், உடுப்பி மாவட்ட பொறுப்பு மந்திரியுமான சுனில்குமார் நேற்று முன்தினம் உடுப்பியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பி.எப்.ஐ. அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டது. அந்த அமைப்பின் செயல்பாடுகளைகாங்கிரஸ் ஊக்குவித்ததன் விளைவாக பா.ஜனதா தொண்டர்கள் 18 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பா.ஜனதா யுவ மோர்ச்சா தலைவர் பிரவீன் நெட்டார் கொலைக்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக தற்போது மாநிலத்தில் பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அலுவலகங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடந்துள்ளது. இந்த வழக்கில் என்.ஐ.ஏ. உயர்மட்ட விசாரணை நடத்தி வருகிறது.காங்கிரஸ் ஆட்சியில் எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. அமைப்பினர் மீதான வழக்குகள் வாபஸ் பெற்றதன் காரணமாக மாநிலத்தில் அமைதியின்மை சூழ்நிலை உருவாகியது.

ஊழல்களின் தந்தை

காங்கிரசின் 'பே-சி.எம்.' பிரசாரம், வெறும் பொய்களின் மூட்டை. சித்தராமையா ஊழல்களின் தந்தை. பா.ஜனதா அரசை விமர்சிக்க காங்கிரசுக்கு தார்மிக உரிமை இல்லை. 40 சதவீத கமிஷன் தொடர்பாக காங்கிரசிடம் எதுவும் ஆவணங்கள் இருந்தால் லோக் அயுக்தாவில் புகார் கொடுக்கலாம்

எந்த ஆதாரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து காங்கிரசார் பிரசாரம் செய்து வருகிறார்கள். இது தான் அவர்களின் தரம்.அடுத்த சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். பசவராஜ் பொம்மை தான் எங்கள் கேப்டனாக இருப்பார்.நிலக்கரி விலை உயர்வு காரணமாக கர்நாடகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்