சித்து மூஸ்வாலா கொலை வழக்கு - கைதான 3 பேரை 6 நாட்கள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு

சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய 3 நபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Update: 2022-09-11 11:30 GMT

சண்டிகர்,

பஞ்சாபி பாடகரும், சமூக ஆர்வலருமான சித்து மூஸ்வாலா, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த மே 29 ஆம் தேதி மூஸ்வாலா தனது காரில் சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல், அவரை கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சித்து மூஸ்வாலா கொலை செய்யப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு நீக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக பஞ்சாப் மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 3 நபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். அதன்படி தீபக், கபில் பண்டிட் மற்றும் ராஜீந்தர் ஆகிய 3 பேர் மேற்கு வங்கம்-நேபாளம் எல்லையில் உளவுத்துறை நடவடிக்கையில் ஏ.ஜி.டி.எப். குழுவினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து இன்று அந்த 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை மூவரையும் அடுத்த 6 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்