பிரதமரை சந்திக்க தெலுங்கானா முதல்-மந்திரிக்கு பயம்; பா.ஜ.க. எம்.எல்.சி.

பிரதமரை நேரில் சந்திக்க தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கு பயம் என்று பா.ஜ.க. எம்.எல்.சி. கூறியுள்ளார்.

Update: 2022-07-02 11:32 GMT



ஐதராபாத்,



தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்காவை வரவேற்பதற்காக இன்று பேகம்பட் விமான நிலையத்திற்கு நேரில் சென்றார். அவருடன் மற்ற மந்திரிகளும் சென்றனர்.

பிரதமர் மோடி இதே விமான நிலையத்திற்கு வருகை தருவதற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன் இந்த வரவேற்பு நடந்துள்ளது. எனினும், பிரதமரை வரவேற்க தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி சார்பில் ஒரே ஒரு மந்திரி அனுப்பி வைக்கப்பட்டார்.

இது சர்ச்சையை கிளப்பியது. இதுபற்றி தெலுங்கானா மந்திரிகளில் ஒருவரான ஸ்ரீனிவாச யாதவ் கூறும்போது, ஏன் பிரதமரை வரவேற்க ராவ் செல்ல வேண்டும்? விதிகளின்படி, ஒரு மாநில பிரதிநிதி சென்று, வரவேற்பு அளிக்க வேண்டும். அதனால், ஒரு மந்திரியாக நான் சென்று அவரை வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.

இதுபற்றி பா.ஜ.க. எம்.எல்.சி. ராமசந்திர ராவ் கூறும்போது, பிரதமர் அல்லது ஜனாதிபதி விமான நிலையத்திற்கு வருகிறார் என்றால், அவரை அந்த மாநில முதல்-மந்திரி நேரில் சென்று வரவேற்க வேண்டும். இதுவே விதிமுறை.

இதனை மீறுவது என்பது முறையாகாது. நாம் பிரதமரை மதிக்க வேண்டும். அவர், பா.ஜ.க.வுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் பிரதமராக இருக்கிறார். பிரதமர் மோடியை நேரில் சந்திக்க தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கு பயம் என்று ராமசந்திர ராவ் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்