திருவனந்தபுரம் கோர்ட்டு பாதுகாப்பு அறையில் இருந்த 110 பவுன் நகையை திருடிய முன்னாள் அதிகாரி கைது

திருவனந்தபுரம் கோர்ட்டு பாதுகாப்பு அறையில் 110 பவுன் நகையை திருடிய முன்னாள் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-20 22:07 GMT

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் கோர்ட்டு பாதுகாப்பு அறையில் 110 பவுன் நகையை திருடிய முன்னாள் அதிகாரி கைது செய்யப்பட்டார். மேலும் அவர் கவரிங் நகையை வைத்து ஏமாற்றியதும் தெரிய வந்தது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கோட்ட அலுவலகத்தில் கோர்ட்டு பாதுகாப்பு அறை உள்ளது. தற்கொலை போன்ற சம்பவங்கள் நடக்கும் போது இறந்தவர் அணிந்து இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் மீட்கப்பட்டு கோர்ட்டு பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருவது வழக்கம். பின்னர் இறந்தவர்களின் உறவினர்கள் தகுந்த ஆதாரத்துடன் வந்தால் அவை திருப்பி கொடுக்கப்படும்.

இந்த நிலையில் திருவனந்தபுரம் முறுக்கம்புழா பகுதியை சேர்ந்த ஒருவரின் தங்க நகையை திருப்பி கேட்டு, உறவினர் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தார். மனுவை பரிசீலித்த கோட்டாட்சியர் நகைகளை திருப்பி கொடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து ஊழியர்கள் பாதுகாப்பு அறையை திறந்து பார்த்தனர். அப்போது அதில் வைத்து இருந்த நகைகள் மாயமானது தெரிய வந்தது. இதுபற்றி விசாரணை நடத்த கடந்த 31-ந் தேதி கோட்டாட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில் பேரூர் கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பாதுகாப்பு அறையில் வைத்திருந்த 110 பவுன் தங்க நகைகள், 120 கிராம் வெள்ளி, ரூ.45 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது. அப்போது அங்கு காப்பக கண்காணிப்பாளராக இருந்த முன்னாள் அதிகாரி ஸ்ரீகண்டன் நாயர் (வயது 59) திருடியது தெரிய வந்தது. அவர் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தங்க நகைகளை திருடி கவரிங் நகைகளை வைத்ததும் அம்பலமானது.

அதைத்தொடர்ந்து நேற்று காலையில் ேபரூர் கடையில் உள்ள முன்னாள் அதிகாரி ஸ்ரீகண்டன் நாயர் வீட்டிற்கு போலீசார் சென்று அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருடிய நகைகளில் பல நகைகள் தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைத்ததும், சிலவற்றை விற்பனை செய்ததும் தெரிய வந்தது. மேலும் நகை திருட்டு சம்பவத்தில் மற்ற ஊழியர்கள் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்