சினிமா பட பாணியில் மருத்துவமனை ஊழியரை கைது செய்ய அவசர பிரிவுக்குள் ஜீப்பை ஓட்டிச்சென்ற போலீசார்

மருத்துவமனையில் நோயாளிகளின் படுக்கைகளை அப்புறப்படுத்திவிட்டு போலீசார் ஜீப்பை ஓட்டிச்சென்ற சம்பவம் கடும் கண்டனத்துக்குள்ளாகி உள்ளது.

Update: 2024-05-23 06:40 GMT

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சதீஷ் குமார் என்பவர் நர்சிங் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.இவர் கடந்த 19-ம் தேதி ட்ராமா அறுவை சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த ஜூனியர் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பாலியல் தொந்தரவு செய்துவிட்டு, தனது ஒழுக்கமற்ற செயலுக்கு மன்னிப்பு கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.நர்சிங் அதிகாரியின் நடத்தை குறித்து பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் கொடுத்த புகாரின் பேரில் மருத்துவமனை நிர்வாகம் உள் விசாரணை நடத்தியது. இதுதொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு சதீஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவரை கடந்த 21-ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்த நிலையில், அன்றைய தினம் டேராடூன் போலீசாரும் அவரை கைது செய்தனர். குற்றம்சாட்டப்பட்ட சதீஷ்குமாரை கைது செய்ய மருத்துவமனைக்கு வந்த போலீசார், ஜீப்பை வெளியே நிறுத்திவிட்டு வராமல் 'தபாங்' பட பாணியில், மருத்துவமனைக்குள்ளேயே போலீஸ் ஜீப்பை ஓட்டி வந்தனர்.

மருத்துவமனையில் இருக்கும் ரேம்ப் பாதையில் வாகனத்தை 4-வது மாடி வரை இயக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகள் ஸ்ட்ரெச்சரில் படுத்திருக்க போலீஸ் வாகனம் நடுவில் வருவதும், மருத்துவமனை பணியாளர்கள் படுக்கைகள் மற்றும் ஸ்ட்ரெச்சரை நகர்த்தி வாகனத்துக்கு வழிவிடுவதும் போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மருத்துவமனை ஊழியரை கைது செய்ய அவசர சிகிச்சை பிரிவுக்குள் காவல்துறையினர் ஜீப் ஓட்டிப் சென்ற சம்பவம் கடும் விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்